முன்னணி கிரெடிட் கார்டு நிறுவனமான எஸ்பிஐ கார்டு மற்றும் எடெர்னல் லிமிடெட் நிறுவனமும் இணைந்து, வாடிக்கையாளர்களின் தினசரி பயன்பாட்டை மையப்படுத்திய புதிய 'எடெர்னல் எஸ்பிஐ கார்டை' அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த கார்டு வரும் 22-ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. மாஸ்டர்கார்டு மற்றும் ரூபே நெட்வொர்க்குகளில் கிடைக்கும் இதற்கு, வாடிக்கையாளர்கள் சொமேட்டோ, பிளிங்கிட் மற்றும் டிஸ்ட்ரிக்ட் செயலிகள் மூலம் முழுமையான டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம். தற்போது இதற்கான 'முன்கூட்டியே அணுகும்' வசதி மேற்கண்ட செயலிகளில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கார்டில் பல்வேறு முக்கியச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில், சொமேட்டோ , டிஸ்ட்ரிக்ட், பிஸ்ட்ரோ மற்றும் பிளிங்கிட் தளங்களில் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும், பிளிங்கிட்டில் பிற பொருட்களுக்கு 5 சதவீத தள்ளுபடியும் கிடைக்கும்.
உபேர் , இக்சிகோ, அப்போலோ மற்றும் அர்பன் கம்பெனி ஆகிய தளங்களில் 5 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகிறது. பிற பொதுவான செலவுகளுக்கு 1 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இந்த கேஷ்பேக் தொகை, மாதாந்திர பில் உருவாக்கப்படும்போது நேரடியாக வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது இதன் சிறப்பு. டிஸ்ட்ரிக்ட் செயலியில் மாதத்திற்கு ஒரு சினிமா டிக்கெட் வாங்கினால் மற்றொன்று இலவசம். மேலும், பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பும்போது 1சதவீதம் கூடுதல் கட்டணத் தள்ளுபடி பெறலாம்.
இந்த கார்டுக்கான இணைப்புக் கட்டணம் ரூ.499 ஆகும். வரவேற்புச் சலுகையாக 6 மாத இலவச சொமேட்டோ கோல்டு உறுப்பினர் சந்தா வழங்கப்படும். ஓராண்டில் ரூ.2 லட்சம் வரை செலவு செய்தால் அடுத்த ஆண்டுக்கான கட்டணம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.